" தவ்ஹீத்"
1. தவ்ஹீத் (இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை)
அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்குவதற்கு முழுத்தகுதியும் பெற்றவன் என்பதையும், தனது தன்மைகளாக அல்லாஹ் குர்ஆனில் கூறிக்காட்டுபவற்றையும், அவனது திருத்தூதர் நபி (ஸல்) அவர்களால் நமக்குச் சொல்லிக்காட்டபட்ட அல்லாஹ்வின் ஏனைய தன்மைகளையும் உறுதிப்படுத்துவதற்குத்தான் ‘தவ்ஹீத்’ என்று பெயர்.
2. தவ்ஹீதின் வகைகள்
அவை மூன்று வகைப்படும்.
1. தவ்ஹீதுர் ருபூபிய்யத்
2. தவ்ஹீதுல் உலூஹிய்யத்
3. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்.
3. தவ்ஹீதுர் ரூபூபிய்யத்
படைத்தல், உணவளித்தல், காத்தல், உயிரளித்தல், மரணிக்கச்செய்தல் போன்ற அனைத்துச் செயல்களிலும் அல்லாஹ் தனித்தவன், எதிலும் எந்த வகையிலும் யாருக்கும் ஒப்புவமை இல்லாதவன் என மன மொழி மெய்களால் உறுதி கொள்வதற்கு ‘தவ்ஹீதுர் ருபூபிய்யத்’ என்று சொல்லப்படும். இவையாவற்றிலும் அல்லாஹ் ஒருவனே தனித்துச் செயல்படுகிறான்.அவற்றில் யாருடைய உதவியும், துணையும், தலையீடும் இல்லை.
4. ”தவ்ஹீதுல் உலூஹிய்யத்”
தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ்ஜு, பிரார்த்தனைகள்,சத்தியம் செய்தல், நேர்ச்சை செய்தல், அறுத்துப்பலியிடுதல் போன்ற அனைத்து வகை வழிபாடுகளும் அல்லாஹ் ஒருவனுக்கே ஆற்றப்படவேண்டும என்று உறுதிப் படுத்துவதற்குப் பெயர் தான் ‘தவ்ஹீதுல் உலூஹிய்யத்’ எனப்படும்.
அதாவது : வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்யப்படவேண்டும்.
5. ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்’
அல்லாஹ்வின் அனைத்துத் திருநாமங்களையும், பண்புகளையும் அவனது மாண்புக்குப் பொருந்தும் வகையில் குர்ஆன்,ஹதீஸ்களில் கூறப்பட்டவாறு உறுதிப்பட நம்புவதற்கு ‘தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத’ எனப்படுகிறது.
உதாரணம் - 1
அல்லாஹ் தனக்கு “ஹையுல் கையூம்” நித்திய ஜீவன்,அகில உலகையும் நிர்வகிப்பவன் எனப் பெயர் சூட்டியுள்ளான்.எனவே நாம் ஹையுல் கையூம் என்பது அவனது திருநாமங்களில் ஒன்று என நம்புவது நமது கடமையாகும்.”அவனுக்கு ஆதியும்கிடையாது அந்தமும் கிடையாது.நித்திய ஜீவன்” என்ற அதில் அடங்கியுள்ள அவனது தன்மையை நம்புவது அவசியமாகும்.
மேலும் அல்லாஹ் தனக்கு ஸமீஃ கேட்பவன் எனவும் பெயர் சூட்டியுள்ளான். இதை அவனது திருநாமங்களில் ஒன்று என்றும்,அவனது பண்புகளில் ஒன்று எனவும் நம்புவது அவசியமாகும்.
உதரணம் - 2
அல்லாஹ் கூறுகிறான் :- அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று யூதர்கள் கூறுகின்றனர்.அவர்களுடைய கைகள் தான் கட்டப்பட்டுள்ளன.இவ்வாறு கூறிய காரணத்தால் அவர்கள் சபிக்கப்பட்டனர்.அல்லாஹ்வின் கைகளோ விரிக்கப்பட்டே உள்ளன. அவன் தான் நாடியவாறு அள்ளி வழங்குகிறான். (5:64)
அல்லாஹ் தனக்கு தாராளமாகவே அள்ளி வழங்கும் இருகைகள் உள்ளன எனக் கூறியதை அப்படியே நம்புவது நம்மீது கடமையாகும். எனினும் நமது உள்ளத்தில் அதற்கு ஒரு வடிவத்தை என்னாமலும்,நாவால் அவ்விரு கைகளுக்கு ஒரு அளவைக் கூறாமலும், அவ்விரு கைகளையும் படைப்பினங்களின் கைகளுக்கு ஒப்பாக்காமலும் நம்பிக்கை(ஈமான்) கொள்வது அவசியமாகும். ஏனெனில்” அவனைப்போல் எதுவுமே இல்லை.அவன் கேட்பவனாகவும்,பார்ப்பவனாகவும் இருக்கிறான் (42:11) “ எனக் கூறுகிறான்.
தவ்ஹீது அஸ்மா வஸ்ஸிபாத்தின் சுருக்கமான கருத்து:- அல்லாஹ்வும்,அவன் தூதரும் எதை உறுதிப்பட கூறியுள்ளார்களோ அவற்றை அப்படியே ” மாற்றாமல், மறுக்காமல்,உருவகப்படுத்தாமல்,ஒப்பாக்காமல் அவற்றின் யதார்த்தமான நிலையில் நம்புவது நம்மீது கடமையாகும்.
நன்றி: அல் பாக்கவி
இஸ்லாத்தை தூயவடிவில் அறிந்துகொள்ள அன்பு சகோதரர் பி.ஜெ அவர்களின் சொந்த இணையத்தை பார்த்து பயன் பெறவும்.
0 கருத்துரைகள்:
கருத்துரையிடுக